டெல்லியை வீழ்த்தியது ரோயல் சலஞ்சர்ஸ்
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் போடப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், கவுதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். ராய் 5 ரன்னிலும், காம்பீர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார். அவர் 48 பந்தில் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சில் சஹால் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர். வோரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த டி காக் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
அதைத்தொடர்ந்து கோலியுடன், டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினார். கோலி 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 23 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் களமிறங்கிய கோரி ஆண்டர்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பெங்களூரு அணி 18 ஓவரில் 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 90 ரன்களுடனும் ( 10 பவுண்டரி, 5 சிக்ஸர்), மந்தீப் சிங் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நாளை நடைபெறும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.