SuperTopAds

நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும்!

ஆசிரியர் - Admin
நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும்!

அனைவரதும் அபிலாசைகள் நிறைவேறி, இலங்கைத் திருநாடு சுபீட்சம் மிக்கதோர் தேசமாக மலரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும் என தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நம் தேசம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எம் அனைவரினதும் பெருவிருப்பாகும்.

இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியோடு, பல முன்னேற்றகரமானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

இருள் நிறைந்த பாதைக்கு ஒளி இருந்தால் அதுவே நாம் செல்லும் வழிக்குத் துணையாக அமையும். அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாளாகும். இந்துக்கள் அனைவராலும் பக்தியோடும் சிறப்போடும் கொண்டாடப்படும் இத்தீபாவளித் திருநாளில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தேசிய ஒற்றுமையைப் போற்ற இது ஒரு சிறந்த நாளாகும். சகல மதங்களிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுவதென்பது, எம்முள் இருக்கும் அறியாமை என்னும் இருள் அகன்று அகவொளி பிரகாசிக்க வேண்டும் என்பதற்கான குறியீடாகும். இந்நன்னாளில் ஏற்றப்படும் தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சமிக்ஞையாகவே எண்ணப்பட வேண்டியது.

மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மாதாவின் பிள்ளைகளை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.