ஜப்பானிய பொது தேர்தல்;!! -புமியோ கிஷிடாவின் எல்.டி.பி கட்சி அமோக வெற்றி-
ஜப்பான் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அமொக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இத் தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 261 ஆசனங்களை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே தனிப்பொரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது.
அந்நாட்டின் அரசியலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்களை இக்கட்சி எதிர்கொண்டது. இந்த விமர்சனங்களை அடுத்து ஒரு வருடமாகப் பிரதமராக இருந்த யோஷிஹிட் சுகா, பதவி விலகினார்.
இதனையடுத்தே புமியோ கிஷிடா பிரதமராகப் பதவியேற்றார். இவர் 2012 முதல் 2017 வரை நாட்டின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.
இந்நிலையிலே நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
465 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றில் பெரும்பான்மைக்கு 233 இடங்கள் தேவை என்ற நிலையில் பெரும்பான்மை பெற லிபரல் டெமாக்ரடிக் கட்சி கூட்டணிகளை நம்பியிருக்க வேண்டி வரும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கள் வெளியானபோதும் அவற்றை முடிவுகள் பொய்யாக்கியுள்ளன.
இதேவேளை, ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கோமிட்டோ கட்சி 32 இடங்களை வென்றுள்ளதால் கூட்டணிக்கு மொத்தம் 293 இடங்கள் கிடைதுள்ளன.