தமிழ் மக்களின் வெறுப்பையே சம்பாதிப்பார் ஜனாதிபதி!

ஆசிரியர் - Admin
தமிழ் மக்களின் வெறுப்பையே சம்பாதிப்பார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ்பேசும் மக்களின் மனதைச் சீண்டிக் கருமங்களை நிறைவேற்ற விரும்புவதன் ஊடாக நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியாது.  இங்கு புரிந்துணர்வு ஏற்படாது.  சமாதானம் ஏற்படாது.  ஒட்டுமொத்த தமிழ்ப்பேசும் மக்களின் வெறுப்பின் வெளிப்பாட்டைத்தான் காலப்போக்கில் ஜனாதிபதி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.

 இலங்கை அரசமைப்பின் 33 ஆம் ஆண்டு உறுப்புரையில், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்தச் செயலணியின் தலைவராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார் - பின்னர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 சிறைத்தண்டனை அனுபவித்த - தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டால் ஒருவரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியுமா?

 13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசேட ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை.  இது ஜனாதிபதியின் திட்டமிட்ட செயலா?

 ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரம் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி குழுக்களை - செயலணிகளை நியமிக்கலாம்.  ஆனால், இவ்விதமான தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் நாட்டினுடைய ஒற்றுமை, சமத்துவம், நீதி, கெளரவம் போன்ற கருமங்களில் மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

 ஜனாதிபதி இவ்விதமான கருமங்களை நிறைவேற்ற விரும்புவன் ஊடாக நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியாது.  இங்கு புரிந்துணர்வு ஏற்படாது.  சமாதானம் ஏற்படுவது மிகவும் கஷ்டம்;  அது ஏற்படாது.

 ஆனபடியால் ஜனாதிபதி இவ்விதமான கருமங்களைச் செய்கின்றபோது நாட்டு மக்கள் - விசேடமாக தமிழ்பேசும் மக்கள் - தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கக்கூடாது.  அதை அவர்கள் வெறுப்பார்கள்.  அந்த வெறுப்பின் வெளிப்பாட்டைக் காலப்போக்கில் அவர்கள் வெளிக்கொணர்வார்கள்.  அதுதான் நிலைமை" என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு