26 நாட்களுக்கு பின் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு பிணை!!
போதைப் பொருள் விருந்து வழக்கில் கைதாகியுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றத்தினால் பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2 ஆம் திகதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதை விருந்தில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8 ஆம் திகதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனக்கு பிணை வழங்கக்கோரி 2 முறை தாக்கல் செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில், தனக்கு பிணை வழங்கக் கோரி வழங்கக்கோரி ஆர்யன் கான் 3 ஆவது முறையாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டாரி ஜெனரலான முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். இந்த மனு மீது இன்று வியாழக்கிழமை உயர் நீதுpமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில், ஆர்யன் கானுக்கு பிணை வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உயர் நீதிமன்றம் போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பிணை வழங்கியதற்காக உத்தரவு நாளை வெளியாக உள்ளது. இதனால், 26 நாட்களுக்கு பின் பிணை வழங்கப்பட்டுள்ளதால் ஆர்யன் கான் நாளை சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.