SuperTopAds

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு!! -லெபனானில் 6 பேர் பலி, 32 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு!! -லெபனானில் 6 பேர் பலி, 32 பேர் காயம்-

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். 

கடந்த வருடம் நடந்த துறைமுக குண்டுவெடிப்பு குறித்த நீதிபதி விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிபதி தாரீக் பித்தரை நீக்குமாறு ஷியா முஸ்லிம் குழுக்களான ஹிஸ்புல்லா இயக்கத்தின் ஆதரவாளர்களும் அரசியல் கட்சியான அமல் இயக்கத்தினரும் கோரிவரும் நிலையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற துறைமுக குண்டுவெடிப்பில் 219 பேர் உயிரிழந்ததுடன், பெருமளவு சொத்துக்களும் சேதமடைந்தன. இது குறிதத விசாரணைகள் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றன.

இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி பக்கச்சார்பானவர் என்று ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டாளிகள் கூறுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இந்த விசாரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய தயோனே-பதரோ பகுதியில் பேரணியாகச் சென்றபோது திடீரென கூட்டத்தினரை நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த லெபனான் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பகுதியை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர்.

கிறிஸ்தவ லெபனான் படைகள் கட்சியே இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக ஷியா முஸ்லீம் குழுக்களான ஹிஸ்புல்லா இயக்கத்தின் ஆதரவாளர்களும் அரசியல் கட்சியான அமல் இயக்கத்தினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வன்முறையைத் தூண்டி, வலிந்து மோதலை ஏற்படுத்தும் நோக்குடனேயே கிறிஸ்தவ லெபனான் படையைச் சேர்ந்தவர்களால் இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. வீதிகளிலும் உயரமான கட்டங்களிலும் இருந்து சினைப்பர் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஷியா முஸ்லீம் குழுக்கள் சாடியுள்ளன.

இந்த வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள லெபனான் ஆயுதப் படைகளின் தலைவர் சமீர் கெகியா, அனைவரையும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தாக்குதல் நடத்தியவர்களைத் தேடு வேட்டையாடும் நோக்கில் படையினர் களமிறங்கியுள்ளனர். வீதிகளில் துப்பாக்கி ஏந்திய எந்தவொரு வன்முறையாளரையும் கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடந்த வன்முறை லெபனானின் மிக மோசமான வன்முறைகளில் ஒன்று என பிரதமர் நஜிப் மிகடி கண்டித்துள்ளார். கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் துக்க தினமான அவர் பிரகடனம் செய்துள்ளார்.