மாகாண பயணத்தடையை மீறி சட்டவிரோதமாக பயணித்த தனியார் பஸ்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு
பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரியநீலாவணை இராணுவ காவலரனில் வைத்து புதன்கிழமை(6) இரவு 10 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதன் போது குறித்த இரு வேறு பஸ் வண்டிகளிலும் சுமார் 100க்கும் அதிகமான பயணிகள் இருந்ததுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சாந்த விஜயகோன் சுகாதார தரப்பு அதிகாரிகளினால் பயணிகள் அனைவரும் அறிவுறுத்தபட்டு மீண்டும் குறித்த பஸ்களில் அழைத்து செல்லப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் சிறுது நேரம் தடுத்து வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த பஸ் வண்டிகளின் சாரதி நடத்துனர்களிடம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இது தவிர அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மாகாணத்தில் உள்வரும், வெளியேறும் பல நுழை வாயில்களில் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவதாகவும் அவ்வாறு கட்டுப் பாடுகளை மீறி பயணம் செய்பவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி அம்பாறை மாவட்டத்தில் இருந்து இரவு வேளைகளில் குளிருட்டப்பட்ட பல தனியார் பஸ்கள் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.