இது உங்கள் தேசம்: வெளியேறாதீர்கள்!! -புலம்பெயர்வோரிடம் கெஞ்சும் தலிபான்கள்-
ஆப்கனிஸ்தாலில் இருந்து வெளியேறும் மக்களை தடுத்து நிறுத்தும் தலிபான்கள் இது உங்கள் தேசம், இதை விட்டு வெளியேற வேண்டாம் என கெஞ்சி வருகின்றனர்.
ஆப்கானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அவர்களது கட்டுப்பாட்டில் வாழ விரும்பாத ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றனர். விமானம் மூலமாக மட்டும் 1.24 இலட்சம் பேர் வெளியேறி உள்ளனர்.
இதுகுறித்து ஐ.நா.,வின் அகதிகள் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கனில் வேலையில்லா திண்டாட்டமும், பணப்புழக்கம் இல்லாததும் மக்களை வாட்டி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஆப்கனில் 91 சதவீத மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே வந்துவிடுவர். அதனால், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆப்கனில் இருந்து 5 இலட்சம் பேராவது அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்வர் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கனில் இருந்து பாகிஸ்தான் செல்வதற்கான எல்லைகளில் பிரதானமானது ஸ்பின் போல்டக் பகுதி. அங்கிருந்து 300 மீட்டர் சென்றால் பாகிஸ்தான் வந்துவிடும்.
இது வழியாக தினசரி 9,000 பேர் வரை வெளியேறி வருகின்றனர். இதையடுத்து ஸ்பின் போல்டக் பகுதியில் முகாமிட்ட தலிபான்கள், அந்த வழியாக வெளியேற முற்படும் ஆப்கன் மக்களைத் தடுத்து, 'இது உங்கள் தேசம், இதை விட்டு வெளியேற வேண்டாம். அவ்வாறு செல்வது ஆப்கன் கலாச்சாரத்தை அவமதிப்பதாகும் என கெஞ்சி வருகின்றனர்.