சாப்பாட்டுக்காக சிறைக்கு சென்ற இளைஞர்!! -விசாரணையில் அதிர்ச்சியடைந்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
சாப்பாட்டுக்காக சிறைக்கு சென்ற இளைஞர்!! -விசாரணையில் அதிர்ச்சியடைந்த பொலிஸ்-

இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் அய்லம் பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் பிஜூ என்பவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் பணமும் கையில் இல்லை. இதனால் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அவர் கஷ்டப்பட்டு வந்தார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றிங்கல் காவல் நிலையம் முன்பு நின்ற பொலிஸ் வாகனத்தின் மீது கல் வீசிதாக்கினார். 

உடனடியாக பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 மாதம் சிறையிலிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்டார்.

வெளியில் வந்த அவர் மீண்டும் வேலை தேடியுள்ளார். ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் மீண்டும் ஆற்றிங்கல் பொலிஸ் நிலையம் முன்பு நின்ற வாகனத்தின் மீது கல் வீசி தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிஸார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், "வேலை தேடி பல்வேறு இடங்களுக்கும் அலைந்து விட்டேன். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வருகிறேன். சிறைக்கு சென்றால் உணவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கல்வீசினேன்" என்று கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொலிஸார் வேறு வழியின்றி அவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.