19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ரோயல்ஸ்

ஆசிரியர் - Admin
19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ரோயல்ஸ்

ஐபிஎல் தொடரின் 11-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 45 பந்தில் 2 பவுண்டரி, 10 சிக்சருடன் 92 ரன்கள் அடித்து அணியின் ரன்குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

பின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மெக்கல்லம், குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நான்கு ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.

அடுத்து குயின்டான் டி காக் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 8 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது டி காக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 26 பந்தில் அரைசதம் அடித்த விராட் கோலி 30 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்ங்களூர் அணி 10.2 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது.

விராட் கோலி அவுட்டானதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது. அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் 18 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நெஹி 3 ரன்னில் ஆட்டமிழக்க, 6-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார்.

16-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், மந்தீப் சிங் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்கள்.

கடைசி மூன்று ஓவரில் பெங்களூர் அணிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை லாக்லின் வீசினார். இதில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ் அடிக்க பெங்களூர் அணிக்கு 13 ரன்கள் சேர்த்தது.

கடைசி 2 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கும், 2-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார் வாஷிங்டன் சுந்தர். 5-வது பந்தில் க்ளீன் போல்டானார். வாஷிங்டன் சுந்தர் 19 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்தார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். கடைசி பந்தில் இவர் ரன் அடிக்கவில்லை.

பெங்களூர் அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மந்தீப் சிங் 25 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.