SuperTopAds

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட பிரேத பெட்டியை உடைத்து அட்டகாசம் புரிந்த நபர்..! கைது செய்யுமாறு கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட பிரேத பெட்டியை உடைத்து அட்டகாசம் புரிந்த நபர்..! கைது செய்யுமாறு கோரிக்கை..

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் சடலம் மின் தகனத்திற்காக வவுனியா கொண்டுசெல்லப்படவிருந்த நிலையில் உயிரிழந்தவரின் உறவினர் என நம்பப்படும் நபர் ஒருவர் பிரேத பெட்டியை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளார். இதனால் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தாமதமாக சடலம் தகனத்திற்கு சென்றுள்ளது. 

நேற்றய தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி மிக மோசமாக நடந்துகொண்ட நபரை கைது செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இது குறித்து மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி - பரந்தன் பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கின்றார். 

அவருடைய சடலம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. இதன்போது உயிரிழந்தவரின் உறவினர் என நம்பப்படும் நபர் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்து சடலம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளார். 

இதனையடுத்து மீண்டும் சுகாதார நடைமுறைகளின் படி சடலம் சீல் பண்ணப்பட்டு வேறொரு பிரதே பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிகுந்த சிரமம் மற்றும் தாமதத்தின் பின்னர்  சடலம் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இனி நடக்காது சுகாதாரத்துறையினர், பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இவ்வாறே கடந்த ஞாயிற்று கிழமை கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஒருவருடைய சடலம் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டபோதும் பின்னர் உயிரிழந்தவரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு

அங்கு அஞ்சலி நிகழ்வுகள்வரை இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் பல பிரமுகர்கள் உள்ளதாக அரசல் புரசலாக கதைகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் கொரோனா பீதியை உருவாக்குகிறது. இது தொடர்பாக மாகாண சுகாதாரதுறையினர் கவனத்தில் கொள்ளவேண்டும். என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.