உள்ளுராட்சி மன்றங்களின் திண்ம கழிவு முகாமைத்துவ திட்டத்தினால் குப்பைகளை உண்ண வரும் யானைகள் குறைவடைந்தது
அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகள் குறைவடைந்து வருகின்றது.
கடந்த காலங்களில் இப்பகுதிகளில் குப்பைகளை உண்ணவரும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்பு மனைகளை தாக்கியதுடன் மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இணைந்து குறித்த யானைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவிற்குள் உள்ளடங்குகின்ற அஸ்ரப் நகர் திண்மக்கழிவு கொட்டும் இடத்தில் இரு வேறு நிறுவனங்கள் திண்மக்கழிவுகளை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்த தொடங்கியுள்ளன.
இதில் ஒரு நிறுவனம் இயற்கை பசளை தயாரிப்பதற்காக அங்கு பொருத்தப்பட்டுள்ள பாரிய இயந்திரத்தின் மூலம் உரத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.மற்றைய தனியார் நிறுவனம் ஒன்று இயற்கை வாயு தயாரிப்பதன் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ஏனைய திண்மக்கழிவுகளை கையாளுகின்றன.
இதனடிப்படையில் தற்போது நாவிதன்வெளி சம்மாந்துறை கல்முனை காரைதீவு அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு நிந்தவூர் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்கள் திண்மக்கழிவுகளை தரம்பிரித்து பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதனால் அதில் உள்ள இயற்கை திண்மக்கழிவுகள் பெரும்பாலும் உரம் தயாரிப்பதற்காக உடனடியாகவே அஸ்ரப் நகர் திண்மக்கழிவு கொட்டும் இடத்தில் உள்ள பாரிய இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உரம் தயாரிக்கப்படுகின்றது.
இதனால் அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை உண்ணுவதற்காக தினந்தோறும் 80க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தந்திருந்த நிலையில் தற்போது 6 முதல் 8 யானைகளே தினமும் வருகை தருவதாக அங்கு பணியாற்றுகின்ற பணியாளர் தெரிவித்தார்.இது தவிர அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற யானைகள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றிருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தினமும் மேற்குறிய உள்ளுராட்சி மன்ற பிரதேசங்களில் இருந்து இப்பகுதிக்கு குப்பைகள் மாநகர மற்றும் பிரதேச சபையின் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகின்ற நிலையில் மலைபோல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகை தந்திருந்தன.
தற்போது இந்த யானைகளை கட்டுப்படுத்த யானை வேலிகள் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இது தவிர மேலும் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பல பொறிமுறைத் திட்டங்கள் பள்ளக்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அம்பாறை பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் அநேகமானவை மேற்குறித்த இடத்திற்கே கொட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.