SuperTopAds

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

ஆசிரியர் - Editor III
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

மாகாண சபைத்தேர்தலை  நடைபெறாமல்   கடந்த அரசாங்கத்தில்  செய்த சதியை மக்கள் மறக்க மாட்டார்கள்


மாகாண சபை தேர்தல் நடாத்தப்படாமைக்கு பிராயசித்தம் கண்டு  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட அந்த ஆட்சியில் பங்கெடுத்த அனைத்து கட்சிகளும்  அனைத்து இலங்கை மக்களிடமும்   பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அவ்வாறு மன்னிப்பு கேட்பதன் ஊடாக தான் எமது  மக்களை திருப்தி அடைய செய்து  கொள்ள முடியும் என   என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின்  தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்  கல்முனையில் அமைந்துள்ள ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி   அலுவலகத்தில் திங்கட்கிழமை(30) இரவு 10 மணியளவில்  இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

அண்மைக்காலமாக மாகாண சபைத்தேர்தல் எமது நாட்டில் நடைபெறாமல் உள்ள விடயம் நம் எல்லோருக்கும் தெரியும்.இதற்கு பிரதான காரணம் கடந்த அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் சேர்ந்து இந்த மாகாண சபையினை இல்லாமல் ஆக்குவதற்காகவும் அல்லது தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காகவும் செய்த சதி காரணமாக தான் இன்று மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதை நாம் அறிவோம்.

அவ்வாறு நடத்தப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்திலே மீண்டும் அதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சூழல் இருந்து கொண்டு இருக்கின்றது.இவ்விடயம் தெரிந்திருந்தும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கேட்பது என்பது உண்மையிலேயே ஒரு கேலி கூத்தாகத்தான் எமக்கு தெரிகின்றது.

கொரோனா முடிந்த பின்பு இவ்வாறு தேர்தல் நடாத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுப்பதை தவிர்த்து கடந்த கால ஆட்சியில் நீங்கள் விட்ட தவறுகளுக்கு பிராயசித்தம் கண்டு அனைத்து இலங்கை மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். மாகாண சபை தேர்தல் நடாத்தப்படாமைக்கு நாங்கள் தான் காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட அந்த ஆட்சியில் பங்கெடுத்த அனைத்து கட்சிகளும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவ்வாறு மன்னிப்பு கேட்பதன் ஊடாக தான் எமது  மக்களை திருப்தி அடைய செய்து  கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் மாகாண சபை தேர்தலை நடாத்துங்கள் கொரோனா முடிவடைந்ததும் தேர்தலை நடாத்துங்கள் என மக்களை ஏமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு முனையக்கூடாது என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.