3 பொலிஸார் உட்பட 13 கொரோனா தொற்றாளராக இரு நாட்களில் அடையாளம் காணப்பட்டனர்
நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுப்பு
கொரோனா அனர்த்தம் காரணமாக தற்போது அமுலில் உள்ள பொது முடக்கத்துடனான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டக் காலத்தில் கல்முனை மாநகரில் நடமாடியோருக்கு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பொலிஸார் உட்பட ஐவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.
இன்று (23)மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியினால் பயணம் செய்தவர்கள் பொலிஸார் இராணுவத்தினரின் பங்களிப்புடன் இடைமறிக்கப்பட்டு சுமார் 100 பேருக்கு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள சந்தைப்பகுதியில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பொலிஸார் ஒருவர் உள்ளடங்கலாக ஐவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து கல்முனை மாநகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையை தொடர்ச்சியாக முன்னெடுக்கின்றனர்.
இதே வேளை ஞாயிற்றுக்கிழமை (22) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரு பொலிஸார் உட்பட 8 பொதுமக்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் உட்பட அங்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் வருகை தந்திருந்த பொதுமக்கள் உட்பட 100 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 8 பொதுமக்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கல்முனைஇ மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களில் தேவையின்றி வீதிகளில் நடமாடுவோர் சுற்றிவளைக்கப்பட்டு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இது தவிர கடந்த 3 நாட்களாக அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அத்தியாவசிய தேவை எதுவுமின்றி எவரும் தமது வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும் இவ்வாறான சுகாதாரத்துறையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் பாராட்டினார்.
எமது கல்முனை பிராந்தியத்தில் டெல்டா திரிபு இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தும் தொற்றும் முறை மற்றும் மரண எண்ணிக்கைகளையும் பார்க்கும் போது டெல்டா திரிபு இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன என கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தொற்றுக்குள்ளானவர்கள் தமது தேவைகளை நிறைவேற்ற வெளியில் செல்லாது இருப்பதோடு உறவினர்கள், நண்பர்கள் மூலம் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுமாறும் , தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்களும் வீட்டைவிட்டு வெளியில் வராது இருக்குமாறும் கேட்டுக்கொண்டதோடு அவ்வாறு வரும் சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் எமது பிராந்தியத்தில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து
வருகின்றது.இந்நிலையில் 'மக்கள் அலட்சியப் போக்குடன் செயற்படாது, மிகக் கவனமானதும்
இறுக்கமானதுமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது காலத்தின் தேவையாகும் என அவர்
தெரிவித்தார்.