நேட்டோ படைகளுக்கு உதவியவர்களை தேடும் தலிபான்கள்!!
நேட்டோ படைகளுக்கும், ஆப்கானிஸ்தானின் முன்னைய அரசாங்கத்திற்காக பணியாற்றியவர்களை தேடும் நடவடிக்கைகளில் தலிபான்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் தகவல்களை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஆயுததாரிகள் தங்களது இலக்குகளை நோக்கி, வீட்டுக்கு வீடு சென்று விசாரணைகளை மேற்கொள்வதுடன், சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களை அச்சுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர், எந்தவொரு பழிவாங்கல் நடவடிக்கையும் இடம்பெறமாட்டாது என தலிபான் பயங்கரவாதிகள் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கை இடம்பெறவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில், தலிபான்களுக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தானிலுள்ள தங்களது பிரஜைகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளை வெளிநாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கின்றன.
இந்த நிலையில், தலைநகர் காபுல் விமான நிலையத்திற்கு வெளியே தொடர்ந்தும் குழப்பமான நிலைமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தயாரிப்பிலான ஆயிரக்கணக்கான கவச வாகனங்களையும், 30 முதல் 40 விமானங்களையும், பெருமளவிலான சிறியரக ஆயுதங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர் என அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.