தவான் அரைசதத்தால் ராஜஸ்தான் ராயல்சை எளிதாக வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ஐபிஎல் 11-வது சீசனின் 4-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அஜிங்கியா ரகானே, டார்கி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். ஷார்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதன்பின் சஞ்சு சாம்சன், ரகானே உடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 13 ரன்கள் எடுத்த ரகானே ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். சஞ்சு சாம்சன் மட்டும் நிதானமாக விளையாடி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 17 ரன்களும், ஷ்ரேயாஸ் கோபால் 18 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணி பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன், சித்தார்த் கவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 126 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரிதிமான் சஹா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். சஹா 5 ரன்கள் மட்டுமே எடுத்து உனத்கட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் தவான் உடன், கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் கடந்தார்.
ஐதராபாத் அணி 15.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியின் ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.