விழாக் கோலம் பூண்டுள்ள மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய வருடாந்தப் பங்குனித் திங்கள் உற்சவத்தின் இறுதிநாள் உற்சவம் இன்று திங்கட்கிழமை(09) வெகு சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
அதிகாலை அம்பாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அம்பாள், விநாயகப் பெருமான், முருகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதியுலா, வெளிவீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பங்குனித்திங்கள் இறுதிநாள் உற்சவத்தை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளிமாவட்ட ங்களிலிருந்தும் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஆலய வெளிவீதியில் பொங்கல் பொங்கியும், சாதம் சமைத்தும் மெய்யுருக வழிபட்டு வருகின்றனர்.
அத்துடன் ஆண் அடியவர்கள் பறவைக்காவடிகள், செதில்காவடிகள் எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும்,கற்பூரச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றி வருகின்றனர்.
இதனால், மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயச் சூழலே விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.