யாழ்ப்பாணத்தில் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பணிக்கு திரும்பிய விவசாய போதனாசிரியருக்கு நடந்த சம்பவம்!
வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் விதை உற்பத்தி பண்ணையில் பணியாற்றும் விவசாய போதனாசிரியர் ஒருவர் பண்ணை முகாமையாளர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேற்படி விவசாயப் போதனாசிரியர் தனது வீட்டிற்குத் திரும்பியிருந்த நிலையில் அவருடைய வீட்டில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சுகாதாரத் தரப்பினரால் குடும்பத்தாருடன் சேர்த்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.
அதனால் அவர் இரண்டு வாரங்கள் பணிக்கு செல்லவில்லை. அதன் பின்னர் இரண்டு நாட்கள் விடுமுறையும் பெற்றிருக்கின்றார். இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலத்தில் பணிக்கு திரும்பவில்லை என்பதை பிரதான குற்றச்சாட்டாக வைத்து விவசாயத் திணைக்கள நிர்வாகத்தினால்
அவருடைய பணி வெறிதாக்கலுக்கு உட்படுத்தப்படுவதாக நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் குறித்த போதனாசிரியர், சம்பவம் தொடர்பில் மாகாண விவசாய அமைச்சின் உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார்.
கொரோனா நிலைமை காரணமாக பணிவெறிதாக்கல் செய்யமுடியாது என்று மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் குறித்த தீர்மானத்தை நிராகரித்து மீண்டும் பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றார். இந்நிலையில் நேற்று குறித்த போதனாசிரியர் பணிக்கு சென்றிருக்கின்றார்.
இதன்போது பண்ணை முகாமையாளர் குறித்த ஊழியரை கடும் வார்த்தைகளால் திட்டியதாகவும் அவருடைய தனிப்பட்ட குடும்ப விவகாரங்களைக் குறிப்பிட்டு கதைத்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த ஊழியர் முகாமையாளரை தாக்க முற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து பண்ணை நிர்வாகத்தினரால் பொலிஸாரின் அவசர தொலைத் தொடர்பு இலக்கமாகிய 119 இற்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு முறையிடப்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் ஊழியர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.
சம்பந்தப்பட்டவர்கள் அரச ஊழியர்கள் என்பதால் பிரச்சினையைப் பேசித் தீர்க்குமாறு பொலிஸார் சமரச முயற்சிக்கு முயன்றிருக்கின்றனர். இருந்தபோதிலும் முகாமையாளர் தரப்பினர் அதற்கு உடன்பட மறுத்த நிலையில் குறித்த ஊழியர் பொலிஸாரால் தடுப்புக்காவலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக
வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நாடுமுழுமையிலும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட சுற்று நிருபத்துக்கு அமைய ஊழியர்கள் மூன்று நாட்கள் சுற்று அடிப்படையில் பணிக்கு வரவேண்டும் என்ற நடைமுறை கைவிடப்பட்டு, வவுனியா விதை உற்பத்திப் பண்ணையில்
மட்டும் அத்தியாவசிய சேவை எனக் குறிப்பிட்டு ஊழியர்கள் ஆறு நாளும் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.