SuperTopAds

ஹிசாலினிக்கு நீதி வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையூறாக உள்ளது

ஆசிரியர் - Editor III
ஹிசாலினிக்கு நீதி வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையூறாக உள்ளது

ஹிஷாலினிக்கு நீதி கோரி கல்முனை நகரில் இன்று (31) போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளுடன் அம்பாறை மாவட்ட  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்  ஏற்பாட்டில் மாதர் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இந்த  போராட்டம்  இடம்பெற்றிருந்தது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுயூதீனின் வீட்டில் பணியாளராக  அமர்த்தப்பட்டு பின்னர் எரிகாயங்களுடன் உயிரிழந்த குறித்த பெண்ணிற்கு நீதி கோரி மேற்படி போராட்டம் நடாத்தப்பட்டதாக  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நிரோஸ் விஜயரட்ணம்   தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்  

உயிரிழந்த  சிறுமிக்கான நீதியை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.இதனை எமது கட்சி தலைவர் கருணா அம்மானின் ஆலோசனையின் பிரகாரம் முன்னெடுத்துள்ளோம்.இப்போராட்டத்தினை செய்யக்கூடாது என எதிர்கட்சியினர் அழுத்தங்களை எமது மக்களுக்கு கொடுத்திருந்தார்கள். எனினும் அந்த தடைகளை தாண்டி தான் இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.  எமது கட்சி 5 மாவட்டங்களில் இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் எமது போராட்டத்தை குழப்புகின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் உரிமைகளை பெற்று கொடுக்காது தட்டி பறிக்க முயல்கின்றது.நல்லாட்சி காலத்திலும் தற்போதும் எதிர்கட்சியாக இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதனால் தான் கருணா அம்மானிற்கு இம்மக்கள் 33 ஆயிரம் வாக்குகளை அள்ளி வழங்கினர் என்பதை நினைவு படுத்த விரும்புகின்றேன்.எனவே ஹிசாலினிக்கு நீதி வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையூறாக இருப்பதை தவிர்ந்து கொள்ளுமாறு கேட்க விரும்புகின்றேன் என்றார்.

நேற்று(30)   உயிரிழந்த சிறுமியின் சடலம்  02 ஆவது பிரேத பரிசோதனைக்காக டயகம பொது மயானத்திலிருந்து தோண்டி எடுக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.