நாளை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; சேப்பாக்கத்தில் பலத்த பாதுகாப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
அ.தி.மு.க. சார்பில் உணணாவிரத போராட்டம் நடந்தது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தின. தமிழ் திரைஉலகினர் ஒன்று திரண்டு நேற்று மவுன போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து அரசியலில் குதித்துள்ள ரஜினி, கமல் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை காட்டினர்.
இந்த நிலையில் மத்திய அரசின் மீதான கோபம் ஐ.பி.எல். போட்டிகள் மீதும் திரும்பியது. காவிரி விவகாரத்தில் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்யா விட்டால் கிரிக்கெட் வீரர்களை சிறை பிடிப்போம் என்றும் சில அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழக மக்களின் உணர்வை மதிக்காமல் எதிர்ப்பை மீறி ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு போராட்டம் நடக்க உள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகனும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி திட்டமிட்டபடி சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த போட்டி அமைப்பாளர்களும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
11-வது ஐ.பி.எல். போட்டி கடந்த 7-ந்தேதி மும்பையில் நடந்தது. அங்கு நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.
இதற்காக டோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்தனர். அவர்கள் அடையாறு கிரவுண் பிளாசா ஓட்டலில் தங்கி உள்ளனர்.
சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை அணியின் ஆட்டம் 2 ஆண்டு தடைக்கு பின்னர் சென்னையில் முதல் முறையாக நாளை நடைபெறுகிறது. இதன் காரணமாக தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
அதேநேரத்தில் சென்னை அணி எதிர்கொள்ளும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் உள்ளார். இதுபோன்ற காரணங்களால் நாளை நடைபெறும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதனை மிஞ்சும் வகையில் எதிர்ப்பும் அதிகரித்து உள்ளது.
இதனை தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மேற்பார்வையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மைதானத்தின் உள்ளே 10 துணை கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 5 கூடுதல் துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள் ஆகியோரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மைதானத்துக்கு வெளியே திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாஷம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலையில் இருந்து கிரிக்கெட் மைதானத்தை சுற்றி உள்ள சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு எப்போதுமே அதிககட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். ஐ.பி.எல். போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நாளை நடைபெறும் போட்டியை காணவரும் ரசிகர்களை தீவிரமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்ப்பாளர்கள் ரசிகர்கள் போர்வையில் மைதானத்துக்குள் நுழைந்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதிலும் போலீசார் கவனமுடன் உள்ளனர். எனவே ரசிகர்கள் கொண்டு செல்லும் உடமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் பதாகைகளை எடுத்துச் சென்று மைதானத்தில் காண்பிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே நாளை கருப்பு சட்டை அணிந்து வரும் ரசிகர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் சென்னை அணி வீரர்கள் தங்கி உள்ள அடையாறு நட்சத்திர ஓட்டல் முன்பும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டிக்காக வீரர்கள் மைதானத்துக்கு வரும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்று கருத்தில் கொண்டு அவர்கள் செல்லும் வழியிலும் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்து போட்டிகளுக்குமே இதுபோன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.