முகமது நபியை அவமதித்ததின் எதிரொலி -காரைதீவு தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
முகமது நபியை அவமதித்ததின் எதிரொலியாக காரைதீவு தவிசாளருக்கு எதிராக சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புனிதமான இறைத்தூதர் முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களை அவதூறு கொண்டு பதியப்பட்ட முகநூல் பதிவொன்றினை தனது முகநூலில் பதிவு செய்து இனவாதத் தன்மையை வெளிப்படுத்திய காரைதீவு தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிரிலுக்கு எதிராக ( ICCPR ) International Convention on Civil and Political Rights (குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயச் சட்டம்) சட்டத்தின் கீழ் இன்று (30) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறித்த பதிவில் தற்போது கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இனவாதக் கருத்தினை மையப்படுத்தி பதிவு செய்யப்பட்ட பதிவினை தனது கருத்தாக தவிசாளர் பதிவிட்டுள்ளார்.
இவ் பதிவிற்கு எதிராக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீல் காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எச்.எம். இஸ்மாயில் (ஸ்ரீ.ல.மு.கா)இ ஏ.ஆர்.எம். பஸ்மீர் (சுயேட்சை)இ எம். ஜலீல் (அ.இ.ம.கா.)இ எம்.என்.என். றணீஸ் (ஸ்ரீ.ல.மு.கா) ஆகியோருடன் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவை தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம் கல்முனை நல்லிணக்க அமைப்பின் தலைவர் ஏ.சி.எம். கலீலுர் ரஹ்மான் பொது மக்கள் என பலரும் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
பல்லின மக்கள் வாழும் பிரதேசத்தின் இவ்வாறு இனவாத கருத்துக்களை செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும். தவிசாளர் செய்த குற்றத்திற்கு பகிரங்க மன்னிப்பினை கேட்காதவிடத்து பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.காரைதீவு தவிசாளரின் இந்த கீழ்த்தரமான குற்றச் செயல் இந்தப் பிராந்திய தமிழ் முஸ்லிம் இன நல்லுறவுக்கு பங்கம் விளைவித்தமைக்கும் மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தினை இழிவு படுத்தியதாக அமைகின்றது என கூறி ( ICCPR ) International Convention on Civil and Political Rights (குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயச் சட்டம்) கீழ் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் கேட்டுள்ளனர்.