ஹிஷாலினிக்கு நீதி கோரி இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
ஹிஷாலினிக்கு நீதி கோரி கல்முனை நகரில் இன்று (30) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார நடைமுறைகளுடன் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் மாதர் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுயூதீனின் வீட்டில் பணியாளராக அமர்த்தப்பட்டு பின்னர் எரிகாயங்களுடன் உயிரிழந்த குறித்த பெண்ணிற்கு நீதி கோரி மேற்படி போராட்டம் நடாத்தப்பட்டதாக கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் தலைவர் ந.சங்கீத் தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில் ,
உயிரிழந்த சிறுமிக்கான நீதியை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.அனேகமான இடங்களில் பணத்திற்காக தரகர்கள் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.எனவே சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற வீட்டார் வர்த்தகர்கள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.பெற்றோர்களிடம் 16 வயதிற்குட்பட்ட தமது பிள்ளைகளை வறுமை நிமிர்த்தம் வேலைக்கு அனுப்புவதை நிறுத்துங்கள் என கோரிக்கை விடுக்கின்றேன்.பெற்றோர்கள் தம் நிலையை கூறி உதவிகளை கிராமசேவகர் பிரதேச செயலாளர் தனவந்தர்களின் ஊடாக உதவிகளை பெற முடியும் என்றார்.
இன்று உயிரிழந்த சிறுமியின் சடலம் 02 ஆவது பிரேத பரிசோதனைக்காக டயகம பொது மயானத்திலிருந்து தோண்டி எடுக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.