கொரோனா விவகாரத்தில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரித்தானிய ஆய்வாளர்கள்!
கொரோனா பாதிப்பு சிந்திக்கும் திறனில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி முன்னெடுத்த ஆய்வில் பகீர் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மூளையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் கண்டறிய சுமார் 81,337 பிரித்தானிய மக்களின் அறிவுசார் திறன்களை ஜனவரி மற்றும் டிசம்பர் 2020 க்கு இடையில் பதிவு செய்யப்பட்டன.
இதில் 12,689 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது அல்லது, இந்த ஆய்வு நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, கல்வித்தகுதி, தற்போதுள்ள அவர்களின் மருத்துவ பிரச்சினைகள் உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எஞ்சியவர்களுடன் ஒப்பிடும்போது சிந்தனை திறன்களில் கணிசமான பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக ஏழு ஐ.க்யூ புள்ளிகள் வரையில் இழப்புடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடுமையாக பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் மூளையானது 10 ஆண்டுகளில் ஏற்படும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
மட்டுமின்றி, லேசான அறிகுறிகளுடன், குடியிருப்பில் இருந்தே குணமடைந்தவர்களும் சிந்திக்கும் திறனை இழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து மீண்ட பெரும்பாலானவர்கள் தர்க்கரீதியான சிந்தனை, சிக்கலைத் தீர்க்கும் திறன் உள்ளிட்டவைகளை இழந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆனால் இது தொடர்பில் ஆழமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.