லண்டனை புரட்டியெடுத்த புயல்: மருத்துவ சேவைகள் பாதிப்பு!
தெற்கு இங்கிலாந்தை இடி மின்னலுடன் புயல் துவம்சம் செய்த நிலையில், லண்டன் மாநகரம் வெள்ளக்காடாகியுள்ளது. தெருக்களிலும், சுரங்க ரயில் பாதைகளிலும் வெள்ளம் சூழ்ந்திருக்க, சாக்கடைகள் நிரம்பி கழிவுநீரை கொப்புளிக்க, வெள்ளத்தால் திணறிக்கொண்டிருக்கிறது லண்டன்.
குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், மருத்துவமனைகள் சிலவற்றை வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளதால், மின்சாரமும் தடைபட்டு, ஜெனரேட்டர்களும் செயல்படாமல் போனதால், மருத்துவ சேவை பாதிக்கப்பட, அவசர சிகிச்சைக்காக வருவோர் தயவு கூர்ந்து வேறு மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளன அந்த மருத்துவமனைகள்.
நேற்று மதியம், தெற்கு இங்கிலாந்தில் ஒரு மணி நேரத்தில் 50 மில்லிமீற்றர் மழை கொட்டித்தீர்த்ததைத் தொடர்ந்து பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், லண்டன் முதலான சில பகுதிகளுக்கு புயல் தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆராய்ச்சி மையம். அத்துடன், Norwich முதல் Plymouth வரையிலான பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடை படலாம் என்று கூறியுள்ள வானிலை ஆராய்ச்சி மையம், அப்பகுதிகளுக்கு புயல் தொடர்பில் மஞ்சம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Whipps Cross Hospital மற்றும் Newham Hospital ஆகிய மருத்துவமனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள NHS, அவசர சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், இந்த மருத்துவமனைகளை தவிர்த்து வேறு மருத்துவமனைகளை நாடுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.