சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்-ஆர்வத்துடன் அரச ஊழியர்கள்
சினோபாம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று(24) கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்றது.
இன்று(24) காலை 8 மணியளவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் தடுப்பூசி ஏற்றும் மையங்கள் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் வழிகாட்டலுக்கமைய 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கருத்து தெரிவிக்கையில் இந்நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதுடன் சினோபாம் மிகச்சிறப்பாக தொழிற்படும் தடுப்பூசியாக இலங்கையில் அறியப்பெற்றிருக்கின்றது.தற்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் கடந்த காலங்களில் பல்கலைக்கழக ஆய்வின் ஊடாக வெளிவந்த தகவல்களை அழுத்தமாக குறிப்பிடுகின்றன.எனவே தான் கொரோனாவில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாக்கும் நோக்கில் இத்தடுப்பூசி ஏற்றுக்கொள்வது அவசியமாகும்.வீட்டில் இருந்து தடுப்பூசி ஏற்றுகின்ற மையங்களுக்கு வர முடியாதவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தின் அடிப்படையில் இரண்டாவது கட்டத்தில் நடமாடும் சேவையூடாக ஏற்றுவதற்கு தயாராகவுள்ளோம்.இச்செயற்பாடு கொழும்பு போன்ற நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.கல்முனை பிராந்தியத்திலும் இத்திட்டத்தை 100 வீதமாக செயற்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.