சாய்ந்தமருது, காரைதீவு புதிய பொலிஸ் நிலையம் திறப்பு
குற்றச் செயல்களையும் போதைப்பொருள் பாவனையையும் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இன்று(23) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திலும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதேசத்திலும் புதிதாக பொலிஸ் நிலையங்கள் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ. கமன் சில்வா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் புதிய பொலிஸ் நிலையங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 7 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அந்த அடிப்படையில் சாய்ந்தமருதிலும் காரைதீவிலும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பொலிஸ் சேவையில் நீண்ட கால அனுபவம் கொண்டவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எஸ்.எல்.சம்சுதீன் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்துக்கான பொறுப்பதிகாரியாகவும் காரைதீவு புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக உப பொலிஸ் பரிசோதகர் கே.கே. அமரானந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.