காணமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவர் 10 ஆண்டுகளின் பின் ஆதார் பதிவு மூலம்கண்டுபிடிப்பு!!
திடீரென காணாமல் போன 10 ஆண்டுகளுக்கு பின் மனநலம் பாதித்த வாலிபர் ஒருவர் ஆதார் பதிவு மூலம் குடும்பத்தினருடன் இணைந்த உருக்கமான சம்பவம் பதிவாகியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பொலிஸார் 8 வயது சிறுவன் ஒருவனை மீட்டனர். மனநலம் பாதித்த அந்த சிறுவனால் பேச முடியவில்லை. இதனால் பொலிஸார் அவனது பெற்றோர் மற்றும் சொந்த ஊரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே பொலிஸார் அவனை நாக்பூர் பஞ்சசீல் நகரில் ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்தி வந்த சமர்த் தாம்லேவிடம் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் 2015 ஆம் ஆண்டு அவரது ஆசிரமம் மூடப்பட்டது. எனவே அமன் என்று பெயரிடப்பட்ட அச் சிறுவனை கவனிக்க யாரும் இல்லை. இதனால் அச் சிறுவனை ஆசிரமத்தார் வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பத்தில் ஒருவனாக வளர்த்து வந்தார்.
இதற்கிடையே அமனுக்கு 18 வயது ஆனதால் அவருக்கு ஆதார் அட்டை பதிவு செய்ய முயற்சிக்கப்பட்டது. இதன் போது 2011 ஆம் ஆண்டே அமனுக்கு ஆதார் கார்டு பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாயமாவதற்கு முன்னர் அவனது குடும்பத்தினர் ஆதார் பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது உண்மையான பெயர் முகமது ஆமீர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமனின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டனர்.