கொரோனா அச்சுறுத்தலினால் இணைந்த தமிழ் தேசிய கட்சி உறுப்பினர்கள்
கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் கல்முனை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை சொறிக்கல்முனை அன்னமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கு உலருணவு பொருட்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் போது சனிக்கிழமை(10) மாலை இடம்பெற்ற இந்நிவாரண செயற்பாட்டில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பாளராக போட்டியிட்ட சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான என். தர்சினி , அந்தோனி சுதர்சன் ஆகியோர் இணைந்து ஈடுபட்டனர்.
இவ்வுலருணவு பொருட்கள் யாவும் மேற்கூறிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட இளைஞர் தலைவர் துசானந்தன் தலைமையிலான குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இணைந்து வீடு வீடாக சென்று விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த உலருணவு பொருட்களில் அரிசி சீனி தேயிலை பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் சுமார் இதுவரை 200க்கும் அதிகமான தமிழ் பேசும் குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.