சக்கரநாற்காலியில் நாடாளுமன்றம் வந்த சம்பந்தன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்.
நாடளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடிய வேளையில் சபை அமர்வுகள் ஆரம்பித்து சிறிது நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சக்கர நாற்காலியில் நாடாளுமன்ற உதவியாளர்களால் சபைக்கு அழைத்து வரப்பட்டார்.
ஆனால் சக்கர நாற்காலியில் வருகை தந்தால் எதிர்க்கட்சித் தரப்பில் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்க முடியும். அதற்கு விரும்பாத சம்பந்தன் எம்.பி தனது ஆசனத்தில் அமர வேண்டும் என கூறியதால் அவரை வெளியே அழைத்துச் சென்ற உதவியாளர்கள் அவரை கைத்தாங்கலாக மீண்டும் சபைக்குள் அழைத்து வந்தனர்.
தனது ஆசனத்துக்கு வருவதற்கு சம்பந்தன் பெரும் சிரமப்பட்டே வந்தார். சம்பந்தன் உள்ளே வரும்போதே அவரது அடுத்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்க சம்பந்தன் வருவதை அவதானித்து அவருக்கு உதவும் வகையில் சம்பந்தன் அமர வசதியாக அவரது ஆசனத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தார்.
சம்பந்தன் தன் ஆசனத்துக்கு வந்ததும் சபாநாயகருக்கு தலை வணங்கி மரியாதை கொடுத்து விட்டே தனது ஆசனத்தில் அமர்ந்தார்.