ஹெட்ரிக் சாதனை படைத்த ஸ்டாபனி டெய்லர்!!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான 3 ஆவது ரி-20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் அணித் தலைவி ஸ்டாபனி டெய்லர் தொடர்ந்து மூன்று விக்கெட்டுக்களைவ வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
இதுமட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட்டில் ஹெட்ரிக் சாதனை படைத்த 2 ஆவது மேற்கிந்தியத்தீவுகள் அணி வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி, மே.இ.தீவுகள் மகளிர் கிரக்கெட் அணியுடன் 3 ரி-20 மற்றும் ஜந்து ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடரின் முதலிரு போட்டிகளிலும் மே.இ.தீவுகள் வென்று தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் 3 ஆவது போட்டி நேற்று நோர்த் சவுண்டில் நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட, முதல் இன்னிங்சின் இறுதி ஓவரில் பாத்திமா சனா, டயானா பேக் மற்றும் அனம் அமீன் ஆகியோரை தொடர்ச்சியாக ஆட்டமிழக்க செய்தார் ஸ்டாபனி டெய்லர். மொத்தமாக 3.4 ஓவர்களை வீசிய அவர் 17 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பந்து வீச்சு மட்டுமல்லாது துடுப்பாட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.