இந்தியாவின் 2 ஆம் தர அணியுடன் விளையாடுவது இலங்கைக்கு அவமானம்!! -கவலை தெரிவிக்கும் ரணதுங்க-
இலங்கையுடன் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட்டின் இரண்டாம் தர அணி வந்திருப்பது நாட்டுக்கு அவமானம் என்று 1996 உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்றுக்கொடுத்த அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையே மூன்று சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர், மூன்று சர்வதேச ரி-20 ஆகிய இரு தொடர்கள் நடக்கவிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கை அணிக்கெதிரான இரு இரு வகையான தொடர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டாம் தர அணியொன்று விளையாடுவதானது, இலங்கை கிரிக்கெட்டின் தரம் எந்தளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், இந்தியாவின் இரண்டாம் தர அணியொன்றுடன் விளையாட முடியாதென ஏன் எமது கிரிக்கெட் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவ்வாறு இரண்டாம் தர அணியொன்றுடன் நாம் விளையாடுவது எமக்கு அவர்கள் செய்யும் அகௌரவமாகும் என்றார்.