இளம் மனைவியை கொலை செய்து எரித்த கணவர்!! -கொரோனாவால் இறந்ததாக நாடகம்-
தனது மனைவியை கொலை செய்து வைத்தியசாலைக்கு பின்புறம் எரித்து விட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய கணவரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
திருப்பதியில் உள்ள அரச வைத்தியசாலைக்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்திய பொலிஸார், அந்தப் பகுதியில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.
புங்கனூர் மண்டலத்தில் உள்ள ராமசாமுத்திரத்தைச் சேர்ந்த அலிபிரி வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த டெக்கி புவனேஸ்வரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளமை தெரியவந்தது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது புவனேஸ்வரியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி வீட்டில் கொலை செய்து உடலை வைத்தியசாலையின் வளாகத்தில் எரித்தது தெரியவந்தது.
புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து உடலை சூட்கேசில் எடுத்து வந்து அங்கு தீவைத்து எரித்தது தெரியவந்திருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களிடம் ஸ்ரீகாந்த் ரெட்டி தனது மனைவி கொரோனா டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் அங்கு அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததால் உடலை கொடுக்கவில்லை எனவும் அவர் நாடகமாடியுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.