பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி!! -460 விமானங்களை இரத்து செய்து சீனா அதிரடி-
சீனாவில் விமான நிலைய பெண் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 460 விமானங்களை இரத்து செய்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
உலகில் முதல் முதலாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சீனாவில் தற்போது பாதிப்புகளை பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என சுகாதார ஆணையம் தெரிவித்தது.
இவர்களில் சென்ஜென் விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் 21 வயது பெண் ஊழியர் ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 110 பேரை தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
பெண் ஊழியருக்கு கொரோனா எதிரொலியாக 460 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, விமான நிலையத்தில் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான பரிசோதனைகள் நடந்துள்ளன. டாங்குவான் நகரில் 13 பகுதிகள் மூடப்பட்டு உள்ளன. போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அண்மையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு கொண்டவர்கள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டாலும், சமூக பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளது என குவாங்சவ் சுகாதார ஆணைய துணை இயக்குனர் சென் பின் தகவல் தெரிவித்துள்ளார்.