இராணுவ ஆட்சியில் 900 பேர் படுகொலை!! -கண்டனம் வெளியிட்ட ஜ.நா சிறப்பு தூதுவர்-
இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மியான்மரில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா வின் சிறப்பு தூதர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அந்நாட்டில் கடந்த பிப்ரவரியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்தது.
இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க இராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், ஐ.நா.வுக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஸ்கிரானெர் பர்ஜனர் ஐ.நா. பொது சபையில் கூறும்பொழுது, இராணுவம் மற்றும் அவற்றின் நியமன அதிகாரிகள் மியான்மரில் நடந்து வரும் ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
நடப்பு சூழ்நிலையில், அந்நாட்டில் படுகொலைகள் தொடர்கின்றன. கடந்த பிப்ரவரியில் இருந்து போராட்டக்காரர்கள் மற்றும் வழிபோக்கர்கள் என பொதுமக்களில் 900 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் உள்ள பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தும் அதிகரித்து காணப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
அந்நாட்டில் அதிகாரத்தை தக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக இராணுவம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.