தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட தவறு தான் மாகாண அதிகாரங்களை பறிக்க காரணம்
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக உருவாக்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்படுகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஒரு கடப்பாடு இருக்கின்றது.ஆனால் அதனை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு செயற்பாட்டினையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட தவறு தான் ஆதார வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரும் போது நடவடிக்கை எடுத்திருந்தால் அரசாங்கம் பயப்பிட்டிருப்பார்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் வருத்தம் தெரிவித்தார்.
அம்பாறை காரைதீவில் இன்று (18) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்
மாகாண சபையின் கீழ் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளை இன்று மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதை நாங்கள் எதிர்ப்பினை தெரிவித்துக்கொள்கின்றோம்.கடந்த காலங்களில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பின்பு குறிப்பாக சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆதார வைத்தியசாலைகள் மாவட்ட வைத்தியசாலைகள் பிரதேச வைத்தியசாலைகள் கிராமிய வைத்தியசாலைகள் அனைத்தும் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களாகும்.இந்த அதிகாரத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் படிப்படியாக மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வது இன்று நேற்று அல்ல .கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட நேரம் குறிப்பாக 13 ஆவது அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டமைக்கு காரணம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் ரஜீவ் காந்தி ஜே.ஆர் ஜெயவர்த்தன போன்றோரால் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தமாகும்.இச்சட்டத்தின் ஊடாக வரையப்பட்ட அதிகாரங்கள் காலத்திற்கு காலம் வருகின்ற அரசாங்கத்தினால் சில அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக உருவாக்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்படுகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஒரு கடப்பாடு இருக்கின்றது.
ஆனால் அதனை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு செயற்பாட்டினையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்ற நேரத்தில் தடுத்து நிறுத்தி இருந்தால் மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் எடுப்பதற்கு பயப்படுவார்கள்.குறிப்பாக ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசினுள் கடந்த காலங்களில் உள்வாங்கும் போது வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தால் அதனை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.அதாவது மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு உள்வாங்குவது மனித உரிமை மீறலாகும்.13 ஆவது அரசியல் சட்டம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பறிப்பதென்பது அது பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே தவிர தனிப்பட்ட சுகாதார அமைச்சருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
இவ்விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.அதற்கு எமது ஆதரவினை அவருக்கு தெரிவித்துள்ளோம்.வடக்கு கிழக்கில் உள்ள சிரேஸ்ட அரசியல்வாதியான அவரது இச்செயற்பாட்டிற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.ஏனைய வட கிழக்கு மாகாண அரசியல் வாதிகளும் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.பிள்ளையான் வியாளேந்திரன் போன்ற அரசாங்கத்துடன் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளும் இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட தவறு தான் ஆதார வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரும் போது நடவடிக்கை எடுத்திருந்தால் அரசாங்கம் பயப்பிட்டிருப்பார்கள்.சுகாதார அமைச்சர் தனியாக செயற்பட முடியாமையினால் தான்தற்போது அவருக்கு துணையாக இரு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.எனவே உங்களுக்கு (சுகாதார அமைச்சர்) நேரம் இல்லாத விடத்து இன்னும் இன்னும் மாகாண சபையின் அதிகாரங்களை பறிப்பதற்கு எமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பறிக்கின்ற அமைச்சர் எமக்கு தேவையில்லை.
உடனடியாக சுகாதார அமைச்சர் இராஜனாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். அதாவது மாகாண சபையின் அதிகாரங்களை பறிப்பது என்பது ஒரு கேலிக்கூத்தான விடயமாகும்.அவ்வாறாயின் வடகிழக்கில் மாகாண சபை முறையை தேவையில்லை.மத்திய அரசாங்கம் தான் சகல விடயங்களையும் முன்னெடுக்க வேண்டும் எனில் ஏன் மாகாண சபையினை உருவாக்கினீர்கள்.மாவட்ட வைத்திய சாலையில் நிர்வாகப்பிரச்சினை ஏற்பாட்டிருந்தால் முறையாக ஆளுநருக்கு அறிவித்து அதற்கு தீர்வு காண முடியும்.அதை விடுத்து மத்திய அரசாங்கத்தின் பால் உடனடியாக கொண்டு செல்வது என்பதை ஏற்கமுடியாது என குறிப்பிட்டார்.