விண்வெளி நிலையத்திற்கு முதல் முறையாக 3 விண்வெளி வீரர்கள் அனுப்பி சீனா!!
சீனா விண்வெளியில் உருவாக்கி உள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளை முன்னெடுக்க 3 விண்வெளி வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சீன விண்வெளி வீரர்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் சீனா தற்போது தனியாக தியாங்காங் என்று விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.
குறித்த விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 340 முதல் 450 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்க போவதாக சீனா அறிவித்திருந்தது.
இதற்காக கடந்த சில மாதங்களாகவே விண்வெளி வீரர்களுக்கு என தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மூவரும் சென்ஜோ -12 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி விழாவாக இன்று நடைபெற்றது.
இதனையடுத்து சென்ஜோ -12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களையும் தாங்கி விண்ணிற்கு செலுத்தப்பட்டது. விண்வெளி மையத்திற்கு செல்லும் 3 பேரும் சுமார் 3 மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு நடத்துவர்.