பொய் பாடசாலை காலங்களில் சொன்னதுண்டு-மக்களை ஏமாற்றியதில்லை-சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ்
பாடசாலை காலங்களில் மாணவர்கள் வழமையாக சொல்கின்ற பொய்களை சொல்லி இருக்கலாம் .ஆனால் இனம் சார்ந்து சமூகம் சார்ந்து எந்த ஒரு பொய்யையும் நான் சொன்னதில்லை.சொல்லப்போவதும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் நேற்றிரவு (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்
கொரோனா காலத்தில் மக்களின் பசியை போக்குவதற்கு கூட இயலாமல் இருக்கு நீங்களா வடகிழக்கினை குட்டி சிங்கப்பூராக மாற்றப்போகின்றீர்கள் தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது.கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என சொன்னானாம் என்கின்ற மாதிரி தயவு செய்து எமது மக்களை ஏமாற்றாதீர்கள்.
தேர்தல் காலத்தில் அபிவிருத்தி மாயையை காட்டி வேலைவாய்ப்பு மாயையை காட்டி வாக்குகளை சூறையாடிவிட்டு வடகிழக்கினை விட்டு போனவர்கள் இன்னும் வரவில்லை.இவர்கள் இனி அடுத்த தேர்தலுக்கு தான் வருவார்கள்.மக்களும் இதனை உணர வேண்டும்.படிக்கின்ற காலத்தில் ஆசிரியருக்கு பொய்களை சொல்லி இருக்கின்றோம்.உண்மையை மறைக்கின்ற வகையிலோ அல்லது நீதியை குழி தோண்டி புதைக்கின்ற வகையிலோ அல்லது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற வகையிலோ எந்தவொரு பொய்களையும் சொன்னதில்லை.சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என பொய் சொல்லவில்லை.
நல்லாட்சி அரசு ஏக்கியஇராச்சிய என்ற சொல்லுக்குள் சமஸ்டியை ஒழித்து வைத்திருக்கின்றது என பொய் சொல்லவில்லை.நாம் அன்று தொட்டு உண்மையை சொல்லி வருகின்றோம்.அரசியலில் மக்களுக்கு உண்மையாக இருக்கின்றோம் சில வேளைகளில் பாடசாலை காலங்களில் மாணவர்கள் வழமையாக சொல்கின்ற பொய்களை சொல்லி இருக்கலாம் ஆனால் இனம் சார்ந்து சமூகம் சார்ந்து எந்த ஒரு பொய்யையும் நான் சொன்னதில்லை.சொல்லப்போவதும் இல்லை என குறிப்பிட்டார்.