SuperTopAds

கொரோனா தடுப்பு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்

ஆசிரியர் - Editor III
கொரோனா தடுப்பு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்

கல்முனை மாநகர சபை எல்லையினுள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக முறையாக ஒழுங்குபடுத்தி, நடைமுறைப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்   திங்கட்கிழமை (31) மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்   தலைமையில், மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.

இதில் மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ. ஏ. ஆஷிக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, பாதுகாப்பு படை உயரதிகாரி, கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அமீன் றிசாத், கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கல்முனை பிரதேச செயலக அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டு பிராந்திய கொரோனா நிலைகள் தொடர்பிலும், அதிகார பரவலாக்கம், அரசினால் முன்வைக்கப்படும் சுகாதார பொறிமுறைகள், தொற்று நோயியியல் சட்டதிட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினர். 

 

மேலும் இறைச்சி கடைக்காரர்கள், நடமாடும் வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஒழுங்கான பொறிமுறைகளுடன் கூடிய திட்டங்களை உருவாக்குதல், வியாபார அனுமதி வழங்குதல் தொடர்பில் உள்ள முரண்பாடுகள், சாதக பாதக நிலைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போது மாட்டிறைச்சியை நடமாடும் வியாபாரம் ஊடாக விற்பனை செய்வதற்கான ஒழுங்கு விதிகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ளன.இவற்றை அனைத்து மாட்டிறைச்சி வியாபாரிகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என பணிக்கப்பட்டதுடன் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.இந்த நடமாடும் வியாபாரத்திற்காக மாட்டிறைச்சி வியாபாரிகளுக்கு விசேட அனுமதி (Pass) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.