தாய் இறந்த துக்கத்திலும் கடமை தவறாத ஆம்புலன்ஸ் சாரதி!! -15 கொரோனா நோயாளிகளின் உரியை காப்பாற்றினார்-
உத்தரப்பிரதேசத்தில் நோயாளர்காவு வண்டியின் சாரதி ஒருவர் தனது தாய் இறந்த செய்தியை அறிந்து கொண்ட பின்னரும் கொரோனா நோயாளிகளை வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லும் பணியை இடைநிறுத்தாமல் தனது கடமை நேரம் முழுவதும் பணி புரிந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (வயது 33) என்ற இளைஞர் மதுராவில் நோயாளர்காவு வண்டியின் சாரதியாக உள்ளார். 9 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் இவர். முதல் அலையின் போதும், இப்போதும் நோயாளர்காவு வண்டியை ஓட்டி மக்கள் சேவையாற்றி வருகிறார்.
கடந்த 15 ஆம் திகதி பிரபாத் இரவுப்பணியில் இருக்கும்போது அவரது தாயார் மரணம் அடைந்த செய்தி கிடைத்தது. ஆனால் நோயாளிகள் பலரையும் வைத்தியசாலை அழைத்து வர வேண்டும் என்பதால் அவர் பணியில் இருந்து பாதியிலேயே செல்லவில்லை.
இரவு முழுவதும் 15 நோயாளிகளை அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அதன் பிறகே தனது கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் தாயின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார்.