சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசுவின் மகிமை
கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற 210 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் சிலுவைப் பாதை பல்லாயிரக் கணக்கான மக்களின் பங்கேற்புடன் பெரிய வெள்ளிக்கிழமையான இன்று (30) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிறிஸ்தவ மக்கள் சவளக்கடை மற்றும் வீரச்சோலை பிரதேசங்களிலிருந்து இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைகளை சுமந்தவாறு பிரதான வீதி வழியாக திருத்தல சந்தியை வந்தடைந்து இயேசு சிலுவையில் அறையப்பட்டு ஊர்வலமாக திருத்தலத்திற்கு எடுத்து வரப்பட்டார்.
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குத் தந்தை அருட்திரு ஜே.இக்னேசியஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் நாலாபுறங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
இதற்கமைவாக இன்று இரவு முழுவதும் இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் வகையிலான பாதச்சுவடுகள் 'பாஸ்கா' நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
இயேசு நாதர் அறையப்பட்டு மரணித்த சிலுவையின் ஒரு பகுதி இந்தியாவிலுள்ள கோவை நகரிலிருந்து எடுத்துவரப்பட்டு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருவது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும்.