SuperTopAds

அரச சுற்றுநிருபத்தை சிற்றூழியர்களும் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்க உயரதிகாரிகள் வழிசமைக்க வேண்டும்-அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம்

ஆசிரியர் - Editor III
அரச சுற்றுநிருபத்தை சிற்றூழியர்களும் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்க உயரதிகாரிகள் வழிசமைக்க வேண்டும்-அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம்

நாட்டில் மிகவேகமாக பரவிவரும் கொரோனா அலையை கவனத்தில் கொண்டு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி அவர்களினால் அரச காரியாலய உத்தியோகத்தர்களுக்கு என்று ஒரு சுற்றறிக்கை அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த  அறிக்கையில் சுழற்சி முறையில் காரியாலய உத்தியோகத்தர்களை பணிக்கமர்த்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை சுகாதார துறை உட்பட இன்னும் பல அலுவலகங்களில் இந்த முறை இன்னும் அமுலுக்கு வராமல் உள்ளது கவலையளிக்கிறது. அரசாங்க அதிபர்கள்இ பிரதேச செயலாளர்கள் இந்த உரிமை மறுக்கப்பட்ட விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அதிலும் குறிப்பாக அலுவலக பணியாளர்களுக்கு இந்த உரிமை முற்றாக மறுக்கப்பட்டு அடிமைகள் போன்று நடத்தப்படுகிறார்கள். என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் வருத்தம் தெரிவித்தார்.

அம்பாறை காரைதீவில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

 இந்த தொடர்பணி நிமிர்த்தம் எங்களின் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாக சபை முக்கிய செயலாளர்களில் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இப்போது சிகிச்சை பெற்றுவருகிறார். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி அவர்களினால் வெளியிடப்பட்ட அந்த சுற்றுநிருபத்தை சிற்றூழியர்களுக்கும் அரச உயரதிகாரிகள் அமுல்படுத்த முன்வரவேண்டும்.

இந்த விடயத்தில் திணைக்கள தலைவர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் கரிசனை செலுத்தி உடனடியாக அரசின் இந்த அறிவிப்பை சிற்றூழியர்களுக்கும் நன்மையடைய கூடியதாக மாற்றி அவர்களுக்கும் உரிமைகளை அனுபவிக்க வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க முன்வரவேண்டும். யுத்தம், சுனாமி, கொரோனா என சகல பேரிடர்களிலும் வடக்கு, கிழக்கு வாழ் ஊழியர்கள் கடுமையாக உழைத்தவர்கள் என்பதை மனதில் கொண்டு விசேட கரிசனை செலுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.