ஒரு கொரோனா நோயாளி மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு நோய் பரவலாம்!! -ஆராய்ச்சியாளர்கள் கடும் எச்சரிக்கை-
கொரோனா நோயாளி ஒருவர் உரிய முறையில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதலை முறையாக கடைப்பிடிக்காமல் இருந்தால், 30 நாட்களில் அவரிடம் இருந்து மேலும் 406 பேருக்கு தொற்று பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஒருவர் முகக்கவசம் அணிந்து, முகக்கவசம் அணியாத கொரோனா நோயாளியுடன் பேசினால் தொற்றால் பாதிக்கப்படாத அந்த நபருக்கு வைரஸ் பரவ 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
அதேசமயம், தொற்றுக்கு ஆளான நபரும், தொற்றால் பாதிக்கப்படாத நபரும் முகக்கவசம் அணிந்திருந்து பேசினால், 1.5 சதவீதம் மட்டுமே தொற்றால் பாதிக்கப்படாத அந்த நபர் கொரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கொரோனா தொற்றுள்ள நபர் சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்.
தொற்று பாதித்த நபர் 50 சதவீதம் சமூக இடைவெளியை பின்பற்றினால் அவரால் 406 நபர்களுக்கு பதிலாக 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். தொற்று பாதித்த நபர் 75 சதவீதம் சமூக இடைவெளியை பின்பற்றினால் அவர் மூலம் வெறும் 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்.