SuperTopAds

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிள்ளையானை கண்டதும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது

ஆசிரியர் - Editor III
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிள்ளையானை கண்டதும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது

 ஊழல்கள் வெளியாகிவிடும் எனும் அச்சத்தில் நடுநிலை ஊடகவியலாளர்களை சபை அமர்வுகளுக்கு தவிசாளர் அனுமதிக்கிறார் இல்லை 


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு  இச்செயற்பாடு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் சிவனேசதுரை சந்திரக்காந்தன்(பிள்ளையான்) அவர்களை கண்டவுடன் கொதித்து கொண்டு இருக்கின்றார்கள்.இதனால்  தனது ஊழல்கள் வெளியாகிவிடும் எனும் அச்சத்தில் நடுநிலை ஊடகவியலாளர்களை சபை அமர்வுகளுக்கு தவிசாளர் அனுமதிக்கிறார் இல்லை என  காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே. குமாரஸ்ரீ குற்றசாட்டினார்.

அம்பாறை ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற காரைதீவு பிரதேச சபை விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 தொடர்ந்தும் பேசிய அவர்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராக செயற்பட்டு வருகின்றேன்.2011 ஆண்டு இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலில் தற்போது தவிசாளராக உள்ளவருடன் நானும் போட்டியிட்டிருந்தேன்.எனவே தான் 2011 ஆண்டு காரைதீவு பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வந்தது.ஆகவே 2011 ஆண்டு முதல் இன்று வரை அந்த கட்சியின் செயற்பாடு இம்மண்ணில் இருந்து வருகின்றது.தற்போது தவிசாளருக்கு பீதி வந்துள்ளது.கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பொழுது மக்களால் துரோகியாக வர்ணிக்கப்பட்டவர்.தற்போது தியாகி என்பதற்கு அப்பால் அதற்கும் ஒரு படி சென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதனால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு  இச்செயற்பாடு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள்இ காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் சிவனேசதுரை சந்திரக்காந்தன்(பிள்ளையான்) அவர்களை கண்டவுடன் கொதித்து கொண்டு இருக்கின்றார்கள்.ஏனெனில் அவர்களுடைய பலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி கொண்டிருக்கின்றது.இதனால் அவர்களுக்கு பயம் வந்திருக்கின்றது.நான் காரைதீவு பிரதேசத்தில் இருக்கும் வரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அதன் அரசியலை மேற்கொண்டே இருக்கும்.இன்று குமாரசிறியாகிய நான் செய்கின்ற செயற்பாடானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் செய்கின்ற செயற்பாடாகவே அமைகின்றது.

மக்களுக்கு தெரியும் இப்பிரதேசத்தில் எமது கட்சி சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்தது.காரைதீவு மண்ணில் முதலாவது சுனாமி நினைவு அஞ்சலி கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினால் தான் செய்யப்பட்டிருந்தது.அவ்வாறு போன்ற செயற்பாட்டில் தான் நாம் இயங்கி கொண்டு இருக்கின்றோம்.தொடர்ந்தும் எதிர்காலத்தில் பல்வேறு தேர்தல்களை சந்திக்க இருக்கின்றோம்.ஆனால் தனது ஊழல்கள் வெளியாகிவிடும் எனும் அச்சத்தில் நடுநிலை ஊடகவியலாளர்களை சபை அமர்வுகளுக்கு தவிசாளர் அனுமதிக்கிறார் இல்லை.நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு முன்வைத்த வாக்குறுதிகளை அமைவாக எனது மாதாந்த கொடுப்பனவை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காக ஊரில் உள்ள முக்கிய அமைப்புக்களினுடாக செலவு செய்து வருகிறேன். ஊர் மக்கள் பொது இடங்களில் குப்பை கொட்ட கூடாது என்பதை வலியுறுத்தி காரைதீவு- அம்பாறை, கல்முனை- அக்கரைப்பற்று வீதியில் பிரதேச சபை இலட்சனை பொறித்த அறிவித்தல்களை தொங்க விட்டுள்ளேன். பிரதேச சபை நிதியை மோசடி செய்து பதாதை வைப்போர் மத்தியில் என்னுடைய சொந்த செலவில் செய்த இந்த பணிகளையும் பிரதேச சபையில் உள்ள சில அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோர் விமர்சித்து வருகிறார்கள். கடந்த பாதீட்டில் தவிசாளருக்கு 170 லீட்டர் எரிபொருளுக்கு சபை அனுமதி வழங்கப்பட்டது. அரசினால் வழங்கப்பட்ட சில சலுகைகளை காரணம் காட்டி அவருக்கு ஆதரவான உறுப்பினரை கொண்டு பிரேரணை முன்வைத்து அதை 500 லீட்டராக சபை அனுமதியை பெற்றுக்கொண்டார். இது யாரின் பணம் ? இந்த அநீதிகளை தட்டிக்கேட்டால் என்னை அவரின் ஜென்ம விரோதிகள் போன்று பார்க்கிறார்கள்.

நான் பதவி வகிக்க ஆரம்பித்த கடந்த 10 மாதங்களாகவே காரைதீவு பிரதேச சபையில் குழப்பங்கள் நிலவுவதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார். கடந்த 39 வது சபை அமர்வில் தவிசாளரின் அறைக்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான குளிரூட்டியை பொருத்த பிரேரணையை சபையில் முன்வைத்தார். அந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டது என்று கூறுவதை விட அவரது ஆணவம் தோற்கடிக்கப்பட்டது என்று கூறுவதே பொருத்தமாக அமையும். அந்த பிரேரணையை நாங்கள் ஏற்று கொள்கிறோம். என்னுடைய உரையிலும் நான் அது தொடர்பில் ஆதரவாகவே தான் பேசினேன். எங்களின் ஆலோசனைகளையும் வலியுறுத்தல்களையும் ஏற்காமையாலையே தான் அதை எதிர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

மக்களுக்கு சேவை வழங்க வேண்டிய நாங்கள் அநியாயமான செலவினங்களினால் எவ்வித சேவையையும் செய்யாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அலுவலக தளபாடங்கள் கொள்வனவு செய்தல், மக்களுக்கான உதவிகள் செய்வதற்கு கூட முடியாத நிலையே இருக்கிறது. கடந்த காலங்களில் தனியார் கோபுரம் அமைத்த வழக்கில் வாதாட 15000 ரூபாய் வழங்கி சட்டத்தரணி நியமிக்கப்பட்டார். நியாயமான காரணங்களை முன்வைத்து எதிர்த்தோம். அதை ஆதரிக்க வேண்டி தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருவித முன்னெடுப்பை கொண்டு ஊர் பிரமுகர்களின் ஆலோசனைப்படி ஆதரவளிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஊர் மக்களை மதித்து நான் செயற்படுகிறேன். இருந்தாலும் இவரின் ஊழல்களை தட்டிக் கேட்பதனால் என்னை விமர்சிப்பதை சிலர் தொழிலாக கொண்டுள்ளார்கள்.

ஊடகங்கள் என்பது மக்களின் தளம். அவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டியது. இங்கு நடக்கும் உண்மைகளை எழுதும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து ஊடக அடக்குமுறையை தலைக்கணத்துடன் காரைதீவு தவிசாளர் செய்துவருகிறார். இவருக்கு எதிர்காலத்தில் இதை விட பல முக்கிய பதவிகளை வகிக்க சந்தர்ப்பம் கிட்டினால் நிலை என்னாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இனவாதக்கரை படிந்த இவரைப்போன்ற ஒருவர் இரு சமூகங்கள் வாழும் சபைக்கு தலைமை தாங்குவது என்பது மிகவும் ஆபத்தானது. அண்மையில் உபதவிசாளருக்கு எதிராக பிரேரணை கொண்டுவருவதாக கூறிக்கொண்டு ஒரு சமூகத்தை இலக்குவைத்து ஒரு நடவடிக்கையை செய்தார். அதை தூரநோக்குடன் நாங்கள் எதிர்த்தோம். உண்மையின் பக்கம் நின்றதனால் எனக்கு எதிராக பழிச்சொற்களை முன்வைத்து வலுக்கட்டாயப்படுத்தி அந்த பிரேரணைக்கு எனது சம்மதத்தை பெற்றார்கள். அண்மையில் முஸ்லிங்களையும், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸையும் இலக்குவைத்து மிகப்பெரிய இனவாத கருத்தை அவர் முன்மொழிந்தார். இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிடாமை ஆச்சரியமளிக்கிறது.

எங்களின் தவிசாளர் ஒருநாள் கூட பாடசாலைக்கு சென்றதை நான் காணவில்லை அவர் எங்களிடம் தகுதி தராதரம் பற்றி பேசுகிறார். நான் நேரடியாக போட்டியிட்டிந்தால் இந்நேரம் தவிசாளர் கதிரையில் நான் அமர்ந்திருப்பேன். துண்டுசீட்டில் தவிசாளராக வந்தவரே அவர். அந்த சீட்டு மாறியிருந்தால் இந்நேரம் எங்களுடன் அமர்ந்துகொண்டு உரத்து கத்திக்கொண்டிருப்பார். எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தில் அவர் சிறந்த பாடம் ஒன்றை படிப்பார். இப்போது 07:05 என அவருடைய செல்வாக்கு சரிந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் அது 10: 02 ஆக மாறும். அப்போது அவர் ஆசனத்திலிருந்து கீழிறங்கவேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.