கல்முனை உப பிரதேச செயலக விடயத்தை கோடீஸ்வரனும் நானும் இணைந்து செய்தோம்-சுமந்திரன் எம்.பி
கல்முனை உப பிரதேச செயலக அமைச்சரவை பத்திரத்தை எவருக்கும் நான் கொடுக்கவில்லை. இது தொடர்பாக திரு கோடீஸ்வரனும்(முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) நானும் இணைந்து தான் எல்லா செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.
கல்முனை உப பிரதேச செயலக அமைச்சரவை பத்திரம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீடம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
கல்முனை உப பிரதேச செயலக அமைச்சரவை பத்திரத்தை எவருக்கும் நான் கொடுக்கவில்லை.இதை பற்றி எனக்கு சரியான விளக்கமில்லை.அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதா? என்பது கூட எனக்கு தெரியாது.அந்த வேளையில் இது தொடர்பாக திரு கோடீஸ்வரனும்(முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) நானும் இணைந்து தான் எல்லா செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தோம்.அந்த ஆவணங்கள் எல்லோரது கையிலும் இருந்தது.ஆகையினால் ஒருவருக்கு கொடுத்து இன்னொருவருக்கு கொடுக்கவில்லை என கூறவதனால் தலை கால் புரியவில்லை.அவர்களுக்கு ஏதாவது புரிதல் உள்ளதோ எனக்கு தெரியாது என்றார்.