SuperTopAds

றிசாத் எம்.பி யின் கைது தொடர்பில் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுகளை போடுகிறார்கள்

ஆசிரியர் - Editor III
றிசாத் எம்.பி யின் கைது தொடர்பில் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுகளை போடுகிறார்கள்

றிசாத் எம்.பி யின் கைது தொடர்பில் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுகளை போடுகிறார்கள்.எனவே இப்போது அவரை 90 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்திருப்பதனால் தற்போது பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கு திருப்திகரமாக உள்ளதா என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் கேள்வியெழுப்பினார்.

புதன்கிழமை (05) அம்பாறை ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச குற்றங்களை செய்த ஒரு பயங்கரவாதி போன்று இன்று றிசாட் பதியுதீன் சித்தரிக்கப்படுகின்றார். இந்தியாவும் கூட நிற்பதாக செய்திகள் வருகின்றன. சட்டத்தின் ஆட்சி நிலைபெறும் நாட்டிலே வெறுமனே ஒரு சில மதத்தலைவர்களையும்இ  இனவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்காக ஊகங்களின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம் தலைவரை கைது செய்து சிறைப்பிடிக்கிறார்கள்.இப்போது அவரை 90 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்திருப்பதனால் தற்போது பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கு திருப்திகரமாக உள்ளதா என கேட்கின்றேன்.

  றிசாத் எம்.பி  உண்மையான குற்றவாளி என்றால் நீதிமன்றங்கள் ஊடாக தண்டியுங்கள் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். அவரும் அதனை பாராளுமன்றத்திலே நான் தவறு செய்திருந்தால் இந்த நாட்டினுடைய உயர்ந்தபட்ச தண்டனை ஆகிய தூக்குத் தண்டனையை எனக்குத் தாருங்கள் என வினயமாக வேண்டியுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இந்தியாவின் கேரள பகுதியில் உள்ள மதத்தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக இன்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

2009ஆம் ஆண்டு இந்தியாவின் கேரள பகுதிக்கு, ரிஷாத் பதியுதீன் விஜயம் செய்திருந்த போது அங்குள்ள மதத்தலைவர்களுடன் நெருங்கி பழகியுள்ளார் எனவும்,  அத்துடன் இவர் அமைச்சராக பதவிவகித்த 2013ஆம் ஆண்டில் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அவர்களுடனான தொடர்பை வலுவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவினை தொப்புள்கொடி உறவாக, றிசாட் பதியுதீனின் பாட்டனார் கேரளாவை சார்ந்தவராக இருக்கையில் அவர் அவருடைய குடும்ப உறவுகளை சந்திக்கச் செல்வது குற்றமா? அமைச்சராக குறித்த காலப்பகுதில் இருந்த அவர் வெளிநாடு சென்று அவரின் உறவுகளை சந்தித்ததற்கும் காரணம் தேடுவது அவரின் சிறப்புரிமை மீறலாகும். இன்று இவர்கள் வேண்டுமென்றே முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுகளை போடுகிறார்கள்.

மேலும் கைத்தொழில் அமைச்சின் செம்பு வழங்குவதில் எந்த விதத்திலும் அமைச்சரோ பிரதி அமைச்சரோ தொடர்புபடுவதில்லை மாறாக அமைச்சின் அதிகாரிகளே தொடர்புபடுவதாக றிசாட் பதியுதீன் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய காலத்தில் பதில் கேபினட் அமைச்சராக இருந்த புத்திக பதிரான தெளிவாக குறிப்பிட்டுள்ளார். தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் இப்ராகிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு கைத்தொழில் அமைச்சினால் அவர்களுக்கு தேவையான செம்புகளில் வெறும் 10 வீதத்தையே வழங்கியிருக்கின்றனர். டெலிகாம் நிறுவனத்திலிருந்து அதிகளவில் செம்புகள் கொலோசியஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரான தெரிவிக்கிறார். டெலிகாம் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரே பதவி வகித்தார் என்பது நாடறிந்த உண்மை அவருக்கும், முன்னாள் ஜனாதிபதியின் செயளாளருள் ஒருவரான சாந்த பண்டாரவுக்கும் பயங்கரவாத தடை சட்டத்தில் இந்த அரசாங்கத்தினர் நடவடிக்கை எடுப்பார்களா ? என கேள்வியெழுப்பினார்.