கொரோனா நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும்!! -இலங்கையை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு-
கொரோனாவின் அண்மைக்கால அதிகரிப்பின் தீவிரமான நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
மேற்படி எச்சரிக்கையினை உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்துக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் ஒலிவியா நிவேரஸ் நேற்று வெளியிட்ட வீடியோ மூலம் விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
இலங்கையில் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முன்னணி சுகாதார பணியாளர்கள், அரசு மற்றும் சுகாதார அமைச்சு அயராது உழைத்து வருகின்றனர்.
தீவிரமாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் உயிர்களைக் காப்பாற்றவும் இலங்கைக்கு உதவ உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகள் சபையும் தயாராக உள்ளது.
வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் மட்டும் முடியாது. அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும் என்றார்.