ரிஷாத் பதியுதீன் கைதுக்கு நிந்தவூர் பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நிந்தவூர் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை அணிந்து சமூகமளித்திருந்ததுடன் தொடர்ந்து சபையில் ஏகமனதாக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் ஏப்ரல் மாதத்திற்கான 04 ஆவது சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை(29) மாலை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2021 மார்ச் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் , 2021 மார்ச் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல், தவிசாளர் எம் .எ . எம் . தாஹிர் உரை ,என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.
மேலும் குறித்த பிரதேச சபையின் அமர்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேர் கருப்புச்சால்வை அணிந்து வருகை தந்திருந்ததுடன் மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த உறுப்பினரும் இவ்வாறு அணிந்து சபைக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன் தவிசாளர் உட்பட சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.அஸ்பர் , ஏ.அப்துல் வாஹிது ஆகியோர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து உரையாற்றியதுடன் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களான றியாஸ் ஆதம் ,அன்சார் உள்ளிட்டவர்களும் கைது நடவடிக்கை கண்டித்து உரையாற்றினர்.
இதன் பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட வேண்டும் என சபையில் ஏகமனதாக கண்டனத்தீர்மானமும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை சபையின் உப தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் கைது நடவடிக்கை தொடர்பில் உரையாற்றியதுடன் அது தொடர்பில் ஏனைய உறுப்பினர்களின் கண்டனத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் மௌனமாக இருந்ததை காண முடிந்தது.
சபை நடவடிக்கையின் போது திண்மக் கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவது தொடர்பாக தவிசாளரினால் உறுப்பினர்களுக்கிடையே வினவப்பட்ட ஆலோசனைக்கமைய உறுப்பினர் கே.எம்.ஜெஸீமா ஆக்கபூர்வமான விடயங்களை சுட்டிக்காட்டினார்.
இறுதியாக நிந்தவூரில் இருந்து பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களை பாராட்டியும் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.