SuperTopAds

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு-ஹென்றி மகேந்திரன் குற்றச்சாட்டு

ஆசிரியர் - Editor III
கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு-ஹென்றி மகேந்திரன் குற்றச்சாட்டு

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு  புதன்கிழமை (28)  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற போது விசேட உரை ஒன்றின் ஊடாக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் உலமா கட்சி தலைவர் பஸில் ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் கல்முனை உப பிரதேச செயலமாக தரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்திருக்கின்றது.றிசாட் பதியுதீன் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்  அல்லாத ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் உலமா கட்சி தலைவரும் இணைந்து செயற்பட்டதாக ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கின்றது.இவ்விடயம் தொடர்பாக கடந்த 35 வருடங்களாக குழப்பட்டு வருகின்றோம்.தமிழ் முஸ்லீம் மக்களை குழப்புகின்ற சக்தி ஒன்று இதன் பின்னணியில் இருந்து செயற்படுகின்றதா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது.தற்போது முஸ்லீம் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை கீற்று ஏதோ ஒரு வழியில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த  வெள்ளிக்கிழமை உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க  அமைச்சர் சமல் ராஜபக்சவினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களான கோவிந்தன் கருணாகரம் செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன்  ஆகியோர் முறையிட்டு இருந்தார்கள்.இதன் போது இராஜாங்க அமைச்சர் பிரதேச செயலகம் குறித்த வெளிவந்த கடிதத்தின் அமுலாக்கத்தினை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இது தவிர பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேசியிருந்தார்.முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி ஆட்சேபனையினையை முன்வைத்திருந்தார்.கடந்த கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தின் போது நாங்கள் ஆதரவினை வழங்கியபோது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் எனவும் இது நியாயமான தமிழ் மக்களின் கோரிக்கை எனவும் அவர்களுக்குரிய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அதை மனப்பூர்வமாக ஆதரிப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.இந்த பிரதேச செயலக தரமுயர்த்தும் போதும் பிரிக்கப்படும் போதும் முஸ்லீம் மக்களுக்கு பாதகமாக ஒன்றும் இடம்பெற கூடாது என்றும் செல்லியிருந்தார் என கூறினார்.

இந்த அடிப்படையில் நாங்கள் நிதானமாக இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய பிரதேச செயலகத்தினை வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.இது சம்பந்தமாக பிற்காலத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என மேலும் தனது உரையில் தெரிவித்தார்.