வடமாகாண கடற்பகுதிகளில் போர்க்காலத்தை ஒத்த அதியுச்ச கண்காணிப்பு..! கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணுவதை நிறுத்துமாறு வடபகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு கடலில் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பணக் கொடுக்கல் வாங்கல், பண்டமாற்று போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் மீனவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மஞ்சள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கொண்டுவருவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களத்தின் கடற்றொழில் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார பாதுகாப்புடன் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து நாட்டின் மீனவர்களை பாதுகாக்க முடியும் என கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடையும் நிலையில் கடல்வழியாக இலங்கை வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் வடக்கு கடலில் மிக தீவிரமான கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் விடயத்தில் மட்டுமல்லாமல் இலங்கை மீனவர்கள் விடயத்திலும் கடற்படை கெடுபிடியான போக்கை கையாள்வதாக கூறப்படுகிறது.