நியூசிலாந்து அணி மேலும் முன்னிலை
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் நேற்றைய இரண்டாம் நாள் நிலவரத்தின்படி நியூசிலாந்து அணி 171 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. மழை காரணமாக நேற்று வெறும் 23 பந்துப்பரிமாற்றங்களே வீசப்பட்டன. இதனால் நியூசிலாந்து அணி இமாலயப் பலம் பெறுவதற்கு இருந்த வாய்ப்பு நேற்றுத் தவறியது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நேற்றுமுன்தினம் ஆரம்பமானது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வெறும் 58 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. பின்வரிசை வீரரான ஓவர்டன் பெற்ற 33 ஓட்டங்களே அதிகபட்சம். ரூட், ஸ்ரோக்ஸ், பரிஸ்ரௌவ், மொயின் அலி, புரோட் ஐவரும் ஓட்ட மெதையும் பெற்றாமல் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் போல்ட் 6 இலக்குகளையும், சவுத்தி 4 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்குக் களமிறங்கிய நியூசிலாந்து அணி நேற்றுமுன்தின நாள் முடிவில் 3 இலக்குகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அணித் தலைவர் வில்லியம்சன் 91 ஓட் டங்களுடனும், நிக்கொல்ஸ் 24 ஓட்டங்களுடனும் இரண்டாம் நாளுக்காகக் களமிறங்கினர்.
சதம் கடந்தார் வில்லியம்சன். அவர் 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நிக்கொல்ஸ் மற்றும் வற்லிங் இருவரும் தாக்குப்பிடித்தனர். நாள் முடிவில் 4 இலக்குகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றுள்ளது நியூசிலாந்து அணி. நிக்கொல்ஸ் 49 ஓட்டங்களுடனும், வற்லிங் 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.